சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , இன்று மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ரோகிணி தலைமையில், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு , தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரோகிணி கூறியதாவது:
" சேலம் மாவட்டத்தில் தேர்தல் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் வாகன சோதனை செய்யவும் வேட்பாளர் செலவின கணக்கை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் சேலத்தில் 18 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 15 கிலோ வெள்ளி பொருட்களும், மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க சி விஜில் செயலி தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்து எளிதாக தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்களை படமாகவோ வீடியோக்களாகவோ அனுப்ப முடியும் என்றார். அப்படி அனுப்பப்படும் புகார்கள் மீது நூறு நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு பதிலும் சொல்லப்படும் என தெரிவித்தார்."