சேலம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியருக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர்.
அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் வழங்கி பாராட்டினார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய ஆட்சியர் ராமன்," தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும் காலங்களிலும் மருத்துவராக விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த உள்ஒதுக்கீடு மிகப்பெரிய பாலமாக இருக்கும்.
மாணவர்கள் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மருத்துவரான பிறகு மருத்துவ சேவை ஆற்ற வேண்டும். " என்று தெரிவித்தார்.
மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய மாணவர்கள்," அரசுப் பள்ளியில் பயின்ற எங்களது மருத்துவக் கனவை நனவாக்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு எங்கள் வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதேபோல மருத்துவ கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்ற உத்தரவு எங்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றி முன்னேற்றம் அடையச் செய்துள்ளது" என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.