சேலம்: நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறையினர் மாநிலத்திலுள்ள மருத்துவ மண்டலங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மருத்து மண்டலத்திற்கு வந்த தடுப்பு மருந்தினை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருந்துகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் மருந்துகள் அனைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வகுமார் கூறுகையில், "சென்னையில் இருந்து இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி மருந்து குப்பிகள் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பாக குளிர்பதனக் கிடங்கில் வைத்துள்ளோம். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நாளில் முதல் கட்டமாக சேலம் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
தற்போது சேலம் மண்டலத்திற்கு 59ஆயிரத்து 800 மருந்து குப்பிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை ஆத்தூருக்கு 4900, நாமக்கல் மாவட்டத்திற்கு 8700, தர்மபுரி மாவட்டத்திற்கு 11,800, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 11 ஆயிரத்து 500 மருந்து குப்பிகள் என அனுப்பப்படவுள்ளன.
மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்தப்படும், யார் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.