தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக, சேலத்திலிருந்து சென்னையிலிருந்து இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 25ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன்.1) முதல் மீண்டும் சேலம் - சென்னை விமானச் சேவை தொடங்குவதாகச் சேலம் விமான நிலைய இயக்குநர் வி.கே.ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்குத் தினசரி பயணிகள் விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசு அறிவித்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு காரணமாக, விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைந்தது.
சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த மே 13ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. பின்னர், மே 23ஆம் தேதி தொடங்கிய விமானச் சேவை, மீண்டும் 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் சேலம்-சென்னை விமானச் சேவை மீண்டும் தொடங்குகிறது. வழக்கமான நேரப்படி விமானம் சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.