தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்து தரும்படி தமிழக அரசுக்கு திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் இருந்து கடந்த நவ.21 ஆம் தேதி, சதீஷ்குமார் என்பவருடைய படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகியோர் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில்,வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக மாறி நேற்று (நவ.29) புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு முன்பாகவே இவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற நிலையில், தற்போது வரை கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது - சென்னைக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இதனால், அச்சமடைந்த திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர், இது குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கடலோர காவல்படையினர், ஆழ்கடலில் தேடியுள்ளனர். ஆனால், இதுவரை மீனவர்கள் சென்ற படகையும், மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
நேற்று (நவ.29) மதியம் 2:30 மணியளவில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவ.30) சனிக்கிழமை தமிழக கடலோர பகுதியில் கரையைக் கடக்க இருக்கும் நிலையில், கடலுக்குச் சென்ற 6 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களையும் , மீனவர்கள் சென்ற படகையும் கண்டுபிடித்து தர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்