தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, அலுவலகம் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இயங்கிவருகிறது. இங்கு, பேருந்து இயந்திரப் பயன்பாடு, உபகரணங்களைக் கையாளுதல் குறித்து, ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்க சின்ன திருப்பதியைச் சேர்ந்த தனியார் நிறுவன பயிற்சியாளர் கார்த்தி என்பவர் பணிமனைக்கு வந்துள்ளார்.
ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் உடனடியாக பணிமனை வளாகத்திலிருந்த பேருந்து இருக்கையில், பயிற்சியாளர் கார்த்தியை படுக்கவைத்து சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.
மருத்துவமனையில் கார்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். தொடர்ந்து அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மயங்கி விழுந்தவரை காப்பாற்ற, ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் துரிதமாகச் செயல்பட்டு பேருந்திலேயே அழைத்துச்சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நடத்துநர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் - சக ஊழியர்கள், அலுவலர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரை டூ ஈரோடு.. 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் வந்த சிறுநீரகம்.. ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு