சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் உள்ளது அஸ்ரா பார்க் உணவகம். இங்கு திங்கள்கிழமை மாலை சேலம் மரவனேரியைச் சேர்ந்த சாகுல் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அந்த உணவகத்திற்கு வருகை தந்துள்ளார்.
உணவு அருந்திய பின்னர் அவர் பார்க்கிங் பகுதிக்குச் சென்றபோது அவரது வாகனம் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாகுல் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினர் உணவகத்தி உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இரு இளைஞர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வருவதும், பின்னர் இவர்களில் சிவப்பு சட்டை அணிந்தவர் ஏற்கனவே தான் வந்த இருசக்கர வாகனத்தை எடுக்கிறார். இவருடன் வந்த கருப்பு சட்டை அணிந்தவர் சாகுலின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
சேலத்தில் உள்ள பல்வேறு உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. இந்த வாகனங்களையும் இந்த இளைஞர்கள்தான் திருடிச் சென்றுள்ளார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: பைக்கை திருடும் சிசிடிவி காட்சி: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!