படம் வெளியானால் நடிகர் மேல் ரசிகன் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டவும், அரசியல் தலைவர்களை வரவேற்கவும், பிறந்த நாள், காதுகுத்து, கோவில் திருவிழா, இறப்பு அறிவிப்பு என பலவற்றை எடுத்துரைக்க போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.
ஆனால், சேலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி என சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மண் கொத்தியே வருக வருக, சாம்பல் வாலாட்டியே வருக வருக என்ற தலைப்பிலான வண்ண வண்ண போஸ்டர்கள், சுவர்களை அலங்கரித்திருந்தன.
என்னடா பறவைகளை வரவேற்க போஸ்டரா? என நமக்கு கேள்வி எழவே. அது தொடர்பான பறவையியல் ஆர்வலர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். கேட்க கேட்க பறவைகள் குறித்த தகவல்களை அள்ளி அள்ளித் தெளித்தனர்.
இது குறித்து சேலம் பறவையியல் கழகத்தின் உறுப்பினர் கணேஷ்வர் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக பறவைகள் குறித்த ஆய்வில் உள்ளேன். சேலத்தில் அதிலும் குறிப்பாக ஏற்காடு அடிவாரப் பகுதியில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஆண்டாண்டு காலமாக வசித்துவருகின்றன.
தற்போது இந்தப் பருவ மழைக்காலம் வலசை போதல் நிகழும் காலம். இந்த மாதம் தொடங்கி வரும் மார்ச் மாதம் வரையில் வெளிநாடுகளில் அதிலும் குளிர்ந்த சூழல் நிலவும் நாடுகளில் இருந்து, போதிய உணவு கிடைக்காத நிலையில் அந்நாட்டு அரியவகை பறவை இனங்கள் இந்தியாவிற்கு வான்வழியே இடம்பெயர்ந்து வருகின்றன.
அப்படி வரும் பறவைகள் வரும் நிகழ்வை வலசை போதல் என்று நாங்கள் அழைப்போம்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் வரும் இப்பறவைகள் இந்தியாவின் மலைப்பகுதிகளிலும் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளை சுற்றிலும் முகாமிட்டு வரும் மார்ச் மாதத்தில் தங்கள் தாயக நாட்டிற்கு மீண்டும் திரும்பும்.
ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஒரு சில அரியவகை பறவைகள் இந்தியாவை நோக்கி வந்துள்ளன. மண் கொத்தி, சாம்பல் வாலாட்டி என்ற இந்த அரியவகை பறவைகள் ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளிலிருந்து தற்போது சேர்வராயன் மலைத் தொடர் ஏற்காட்டிற்கும் மூக்கனேரிக்கும் வலசை வந்துள்ளன.
வெளிநாட்டிலிருந்து வரும் வலசை பறவைகள் அனைத்தும் தட்பவெப்ப சூழலுக்காகவும் உணவிற்காகவும் மட்டுமே இங்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நமது ஊர்களில் இவை இனப்பெருக்கம் செய்யாது. மீண்டும் இவற்றின் தாயகத்திற்குச் சென்றுதான் இனப்பெருக்கம் செய்யும்.
இங்கே தங்கியுள்ள காலங்களில் விவசாயத்திற்கு தீமை விளைவிக்கக்கூடிய புழுக்களையும் பூச்சிகளையும் இப்பறவைகள் அதிக அளவில் உண்டு நமக்கு மிகப்பெரிய சேவையை செய்துவருகின்றன என்பது நமக்கு ஆச்சரியமூட்டும் தகவல்.
எனவே இதுபோன்ற பறவைகளின் முக்கியத்துவத்தை அவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதேபோல சேலம் பறவையியல் கழகத்தில் ஆர்வலராகத் துடிப்புடன் செயல்பட்டுவரும் ஏஞ்சலின் மனோ கூறுகையில், "பறவைகள் குறித்த அறிதல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு என சிறப்பு நிகழ்வுகளை ஆன்லைன் மூலமாக நாங்கள் நடத்திவருகிறோம்.
ஒவ்வொரு ஞாயிறும் அதற்கான வகுப்புகள் நடைபெறும். எங்களது இணையதளத்தில் தொடர்புகொண்டு தங்களுக்குத் தெரிந்த பறவைகள் குறித்த விவரங்களைப் பதிவுசெய்யலாம் விளக்கம் பெறலாம்" என்று தெரிவித்தார்.
மேலும் அழிந்துவிட்டதாக கூறப்படும் சிட்டுக்குருவி இனங்கள் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்கிப் பெருகி வளர்ந்து உள்ளதாகவும் கூறி நம்மை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
சேலம் மாவட்டத்தின் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கன்னங்குறிச்சி, சின்னகொல்லப்பட்டி, கோரிமேடு, கோம்பைபட்டி, குரும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் உல்லாசமாக சுற்றித் திரிந்து வாழ்ந்துவருகின்றன என்றும் இவர்கள் ஆதாரங்களுடன் தெரிவித்து மகிழ்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்க்கும் ஒவ்வொரு பறவைகளையும் பெயர் திறந்து அழைத்து மகிழும் சூழலை சேலம் பறவையியல் கழகத்தினர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
உண்டி வில்லெடுத்து பறவைகளை அடித்து வீழ்த்தி அவற்றை சமைத்து உண்ட கிராமத்து விடலைகளின் கைகள், தற்போது பேப்பர் பேனா எடுத்து ஒவ்வொரு பறவையின் உருவம், வண்ணம், செயல்பாடுகள் என அனைத்தையும் குறிப்பெடுக்கும் சூழலுக்கு அவர்களை உருமாற்றி உள்ளனர் சேலத்து பறவைகள் ஆர்வலர்கள் பாராட்டுக்குரியவர்களே.
இயற்கையோடு மனிதன் இயைந்து வளர்ந்தால், வாழ்ந்தால் மட்டுமே வளரும், வரும் தலைமுறைகள் பாதுகாப்புடம் இந்த பூவுலகில் வாழ முடியும் என்பதில் ஐயமில்லை. அதனால், நம்மால் முடிந்த அளவு நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாவண்ணம் இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.
இதையும் படிங்க...கரோனா ஊரடங்கால் பயனற்றுபோன விளையாட்டுப் பயிற்சிகள்!