சேலம் மாவட்டத்தில் தெற்குத்தொகுதிக்கு உட்பட்ட 44வது வட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணிமனை அண்மையில் திறக்கப்பட்டது. இந்த தேர்தல் பணிமனைக்கு நேற்றிரவு சுமார் இரண்டு மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் தேர்தல் பணிமனை முழுவதும் தீயில் கருகி நாசமாயின. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரைக்கொண்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின.
இது குறித்து சேலம் கிச்சிப்பாளையம் பகுதி காவல்துறையிடம் அமமுக கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். மேலும் அமமுக வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாமல் மர்ம நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தினால் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார வயர்கள் எரிந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.