சேலம் அழகாபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் சேலத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனியன்று கடத்திச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர், உறவினர்கள் கண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில், கண்ணனின் தந்தையை தொடர்புகொண்ட ஒரு கும்பல் ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான் கண்ணனை விடுதலை செய்வோம் என்று கூறி பணம் கேட்டு மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணனின் தந்தை இந்த கடத்தல் சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரை சந்தித்து புகார் செய்தார். இதனையடுத்து துணை ஆணையர் தங்கதுரை, அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தவேல், காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை செய்து இந்த கடத்தலில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த ஹரிஷ் கண்ணன், வின்சென்ட் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, வாழப்பாடி அத்தனூர்பட்டியைச் சேர்ந்த திருமுருக பாண்டியன், சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீ வசந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களிடமிருந்து கண்ணனை மீட்டு அவர்களிடமிருந்து, கடத்த பயன்படுத்திய கார், வீச்சரிவாள், செல்ஃபோன் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:
காணொலி எடுத்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துவந்த இளைஞர் கைது