சேலம் : சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, மலைப்பாதையில் ஆங்காங்கே அருவிகள் உருவாகி தண்ணீர் விழுந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் ஏற்காடு அடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் அதிகாலை முதல் 5 மணி நேரம் போராடி பாறையை உடைத்து அகற்றினர். இந்தப் பணிகள் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மலைப்பாதையை கடக்க வேண்டுமென வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : யானைகளை தனிநபர்கள் வைத்திருக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!