சேலம் அடுத்த வீராணத்தில் நகை கடை நடத்தி வருபவர் கார்த்திக். இவர், தனது நண்பர் கோல்ட் மணி என்பவர் கொடுத்த தகவலின் பேரில், 20 பவுன் பழைய நகையை வாங்குவதற்காக ரூ.6.55 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, கடந்த ஜூன் 16 ஆம் தேதி அம்மாபேட்டை ராஜகணபதி தெருவில் வசிக்கும் தனுஷ் (எ) தனசேகரை சந்தித்துள்ளார்.
அப்போது தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேகர், நவீன்குமார் மணி (எ) மணிகண்டன் உள்ளிட்டோர் சுத்தியலால் கார்த்திக்கை தலை, முதுகு, மார்பு பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ 6.55 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுதொடர்பாக கார்த்திக், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் தனுஷ் (எ) தனசேகர் உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, ரூ 6.55 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கைதானவர்கள் இதுபோன்று வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை முடிவில், நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சட்ட விரோதமாக நகைக் கடை வியாபாரியை அடைத்து வைத்து, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதான நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது!