மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 45 பேர், கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமான பணிக்கு செல்ல தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் வந்த பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கலியனூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டயர் பஞ்சராகி நின்றுள்ளது.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் டயரை சரிசெய்ய முயற்சித்துள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த மூவர் கிழே இறங்கி ஓட்டுநருக்கு உதவிசெய்துள்ளனர். அப்போது, சேலம் வாழப்பாடியிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரி, நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சல்மான் (40) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த இரண்டு கூலித்தொழிலாளர்கள் தீபக் (38), அக்தர் (38) மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதில் தீபக் சேலம் அரசு மருத்துவமனையிலும், அக்தர் சங்ககிரி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் இவ்விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ராஜமன்னாரை தீயணைப்புத் துறையினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய சங்ககிரி காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சங்ககிரி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெண்களின் ஆபாச படங்களை பரப்பியவருக்கு பிணை!