தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி. முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிவரும் இவர், மாவட்ட வருவாய்த் துறை சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்களுக்கு அலுவலகரீதியாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் நிலை அலுவலர்களுடன் அவ்வப்போது முறையிட்டு தீர்வு பெற்றுத் தருவார்.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றும் இலக்கியா செலவு பட்டியல்களை அனுப்பக் கால தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து இலக்கியாவின் நேரடி உயர் அதிகாரியான, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, அவரிடம் விசாரணை நடத்தி கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இலக்கியா வருவாய்த்துறை முதுநிலை அலுவலர் அர்த்தனாரியிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக அர்த்தனாரி, சாந்தியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் அர்த்தனாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் அலுவலர் சாந்தியிடம் அநாகரிகமாக பேசியதாக, ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், இலக்கியாவை தனது தங்கை என்றும் பொறுமையாக பேசாவிட்டால் பிரச்னை ஆகிவிடும் என்ற தொனியிலும் அர்த்தனாரி கூறியுள்ளார். மேலும், ஆபீசுக்கு நேரில் வந்தால் சுடுகாடு ஆக்கி விடுவேன். நீயும் ஒரு பெண் அதிகாரி தானே, ஆபீசையே இழுத்து மூடி, சீல் வைத்துவிடுவேன் என மிரட்டியதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ பரவியதை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் , அர்த்தநாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என சேலம் மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவேளை அலுவலர் சாந்தியின் மீது தவறு எனில் மாவட்ட ஆட்சியரிடம் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். இது போல அநாகரிகமாகப் பேசக் கூடாது எனச் சாந்தியின் தரப்பில் கூறப்படுகிறது.
அர்த்தனாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்காத சாந்தி, ஆடியோவை அம்பேத்கர் மக்கள் இயக்கத்திடம் கொடுத்தது தவறு என வருவாய்த்துறை அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி மிரட்டல் ஆடியோ விவகாரம் குறித்து அர்த்தனாரியிடம் விசாரித்தோம். அலுவலர் சாந்தியின் மீது ஏற்கனவே பல புகார் உள்ளதாகத் தெரிவித்த அர்த்தனாரி, உடன் பணியாற்றும் அலுவலர்களிடம் அநாகரிகமாக பேசுவதையே அவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இலக்கியா என்னிடம் தெரிவித்த புகாருக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அதைச் சாந்தி பதிவு செய்தது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணையின் முடிவுக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும். இந்த விவகாரத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஏன் தலையிடுகிறது என்பது புரியவில்லை” என்றார்.
இதையும் படிங்க:குமரி ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில்: அரசு தகவல்கள் திருட்டு