உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அரசு அனுமதி வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சேலத்தில் அரசு சார்பில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம். உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
வெளியூர்களிலிருந்து சேலம் வரும் மக்கள் உணவகங்களில் மட்டுமே சாப்பிட முடியும். தண்ணீர் குடிப்பதற்குக்கூட அவர்கள் ஹோட்டலுக்குத்தான் வர வேண்டும்.
பார்சல் சேவை மட்டுமே வழங்கினால் ஹோட்டல் தொழில் நடத்துவதில் மிகுந்த நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டு நாங்கள் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளோம்.
ஹோட்டல் பணியாளர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத சூழலில் தவிக்கிறோம். உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கினால், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியும்.
அரசு ஹோட்டல் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். அதேபோல ஜிஎஸ்டி வரியை இந்தப் பேரிடர் காலத்தில் கட்ட முடியவில்லை. எங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19: காவல் துறையின் புதிய கட்டுப்பாடு!