மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் பரப்புரை செய்தனர்.
அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையில் நடைபெறும் மத்திய ஆட்சி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இது அசிங்கமான ஆட்சியாக இருக்கிறது. 5 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவிகள் செய்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்குவோம் என்று கூறுகிறார். அதையே பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் வெறுங்கனவு.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயியின் மகன் என்றும் விவசாயியின் மகன் முதல் அமைச்சராக இருப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் ஊர் ஊராக பேசி வருகிறார் . விவசாயின் மகன் முதலமைச்சராக இருக்கலாம் ஆனால் விஷவாயு முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பதே எங்களின் கருத்து. ராகுலை இளம் தலைவர் என அழைப்பதை விட இளம் பிரதமர் என அழைப்பது சரியாக இருக்கும். முதன்முதலில் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று அறிவித்தது நான்தான் அதையே இங்கும் வலியுறுத்துகிறேன். நாடும் நமதே நாற்பதும் நமதே என ராகுல் காந்தியிடம் இப்போது உறுதியளிக்கின்றேன். நேரு குடும்பத்தில் இருந்து வந்துள்ள நீங்கள் இந்தியாவுக்கு நல்லாட்சி தர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக கொடுமைகளைச் சகித்துக் கொண்டு இருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,"பாரதிய ஜனதா இந்தியாவில் ஒற்றை நோக்கம் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்கிறது. அதையே இந்த நாட்டு மக்களுக்கும் திணிக்கப் பார்க்கிறது . அதனால்தான் நீட் தேர்வு கொண்டு வந்தார்கள். மாநிலங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை பாரதிய ஜனதா விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ அனைத்து மொழியும் கலாச்சாரமும் இணைந்து பணியாற்றும் இந்தியாவை உருவாக்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறது.
தமிழ்நாடு நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது. தமிழ்நாட்டின் முடிவுகளை டெல்லி பிரதம அமைச்சரின் அலுவலகம் எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது. நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று கூறுகிறோம். தமிழர்களின் குரல் இந்தியாவை வலிமை மிக்க நாடாக உருவாக்க வழி நடத்த வேண்டும் என்கிறோம்.
அதனால்தான் நாங்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம் இந்தியாவின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை. தன்னுடைய தந்தைக்கு தமிழக அரசால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று மு.க. ஸ்டாலின் வருத்தப்பட்டார் . அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உலகம் போற்றும் தலைவர் கருணாநிதி. அவர் தமிழகத்தின் குரலாக இருந்தார்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவி அனிதா உயிரிழந்தார். அது ஒட்டுமொத்த மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது. அதே போல மேலும் மாணவிகள் நீட் தேர்வால் பாதிப்படைந்து மரணம் அடைந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ள, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், கள்ளக்குறிச்சி வேட்பாளர் கௌதம சிகாமணி, கரூர் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு வேட்பாளர் கணேச மூர்த்தி ஆகியோருக்கு ராகுல் காந்தியும் மு.க. ஸ்டாலினும் வாக்கு சேகரித்தனர்.