சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கிராமத்தில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிசிசிஐ முன்னாள் சேர்மன் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் , தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி சேர்மன் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் , சேலம் போன்ற நாட்டின் உட்பகுதியில் இருந்து சர்வதேச அளவில் விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் வரும் காலத்தில் உருவாவார்கள். அதற்கு இந்த கிரிக்கெட் மைதானம் உதவும்.
வெகு விரைவில் இங்கே நான் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன். இந்த புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில், டிஎன்பிஎல் போட்டிகள் நடக்க வேண்டும். " என்று கூறினார்.
அடுத்து பேசிய பிசிசிஐ முன்னாள் சேர்மன் சீனிவாசன்," அழகான இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம், முதலமைச்சர் கையால் திறந்து வைக்கப்பட்டது தமிழ்நாடு அளவில் இதுதான் முதல் முறை. இதற்கு முன் எந்த தமிழ்நாடு முதலமைச்சரும் கிரிக்கெட் மீது இவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை. அதற்காக முதலமைச்சரை மனம் திறந்து பாராட்டுகிறேன்.
மேலும் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் இங்கே டிஎன்பிஎல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் திறப்பு