சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை அருகில் உள்ள நாம மலைப்பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் எங்கு சென்றாலும் அந்த வழியே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் சென்று வர வேண்டும்.
இதனால் அந்த நெடுஞ்சாலையை கடக்கும்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பலரும் விபத்தில் சிக்கி கொள்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டி பெற வலியுறுத்தி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கருப்புக் கொடிகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பேட்டியளித்த நாம மலை கிராம மக்கள் கூறுகையில்,
"பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர், அலுவலக வேலைக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர் என யாரும் இந்த சாலையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாத நிலை உள்ளது. அதிவேகத்தில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. சாலையைக் கடக்கும் நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. எனவே தமிழக அரசு உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம மலை கிராமம் புறக்கணிப்போம்" என்று தெரிவித்தனர்
இதனிடையே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் கருப்புக் கொடிகளுடன் கூடி போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.