சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் கள்ளத்தனமாக கடை வைத்து மதுபான விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் கூறி வந்தனர். இதில், குடித்துவிட்டு போதையில் வரும் நபர்கள் பெண்களை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாருக்கு காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாகிர் அம்மாபாளையம் மக்கள் ஒன்று திரண்டு, கள்ளத்தனமாக மதுபானம் விற்ற கடையை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் ஆண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப் போவதாகவும் கடை உரிமையாளர்கள் மிரட்டல் விடுத்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிர் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த அமுதா கூறுகையில்,
மது விற்பனையை நிறுத்த வலியுறுத்தி போராடிய எங்கள் மீது, மதுபான விற்பனை செய்த உரிமையாளர்கள், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே வீடு தேடி வந்து அடியாட்களைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.