தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வரும் 14ஆம் தேதி தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டி, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
பொங்கல் விழாவிற்காகப் பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறுவிதமான பானைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுவருகிறது. சீர் பொங்கல் பானைகள் தவிர பிற பொங்கல் பானைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் பானைகளின் விலை 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் புதியதாக வனையப்படும் பானைகள் சூளையில் வைத்து சுட்டு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பானைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது என சேலம் பானை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பெரிதும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பொங்கல் பானைகள், சீர் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'பாஜகவும் பொங்கல் விழாவும்' தொடரும் சொதப்பல்களால் சோகத்தில் நிர்வாகிகள்!