சேலம் அம்மாபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ஈசன் இளங்கோ. சமூக ஆர்வலரான இவர் பொங்கல் பண்டிகையின்போது தபால் கார்டுகளை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தபால் கார்டு மூலம் வாழ்த்து தெரிவிப்பார். இந்த ஆண்டு புதுமையான முயற்சியில் ஈசன் இளங்கோ ஈடுபட்டுள்ளார். இதன்படி தபால் காடுகளை மாணவ மாணவிகள் எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி ஒரு லட்சம் தபால் கார்டுகளை வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் இந்த தபால் கார்டுகளை பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கி கட்டாயம் தபால் கார்டுகளை பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்களுக்கு கடிதம் எழுதுங்கள். இதன் மூலம் நட்பு அதிகரிக்கும், உறவு பலப்படும், கையெழுத்து அழகாக மாறும் என தெரிவிக்கிறார்.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி சேலம் சிங்க மெத்தை பகுதி அருகில் உள்ள சௌராஷ்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவில் சமூக ஆர்வலர் ஈசன் இளங்கோ கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தபால் கார்டுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு தபால் கார்டுகளை எப்படி எழுதுவது என்றும் விளக்கி கூறினர். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது நண்பர்கள், பெற்றோர், உறவினர்களுக்கு தபால் கார்டில் வாழ்த்துக் கடிதம் எழுதினர்.
இதையும் படிக்க: 'இந்திய வான்வெளியில் நுழைந்த பாக்., விமானம்!' - உளவு பார்க்கிறதா பாகிஸ்தான்?