சேலம் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே, பூலாம்பட்டி, ஈரோடு மாவட்ட எல்லையான நெருஞ்சிப்பேட்டை பகுதியையும் இணைக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டுள்ளது.
இவ்வணையில் தேக்கப்படும் தண்ணீரைக் கொண்டு, நீர் மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. சுமாராக 2 கிலோ மீட்டர் அகலத்திற்கு பரந்து விரிந்து தேங்கிய கடல்போல் காட்சி அளிக்கும் பூலாம்பட்டி கதவணைப்பகுதியில், பூலாம்பட்டி-நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
குட்டி கடலாகக் காட்சியளிக்கும் பூலாம்பட்டி படகுத்துறையில் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் குளிர்ந்த காற்றோடு இனிமையான காலநிலை நிலவுவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
மலைகளின் மடியில் கடல் போல இருக்கும் பூலாம்பட்டி படகுத்துறையில் படகு, பரிசல் பயணம் செய்யும் போது மனக்கவலைகல் மறைந்து உற்சாகமாக மனநிலை உருவாகும். இயற்கைக்கு ஏது ஈடு இணை. பசுமை நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பூலாம்பட்டி படகுத்துறை பகுதியை சுற்றுலா தலமாக்க பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பூலாம்பட்டி படகுத் துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. சில வாரங்களுக்கு முன்பு பொது முடக்கத்தில் அரசு தளர்வுகள் அளித்துள்ளதால் படகுத்துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை பூலாம்பட்டி படகுத் துறையை மேம்படுத்தி, புதிய வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் ஜனார்த்தனன்,”ஏற்காடு, மேட்டூர் அணை ஆகிய சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து வசதி மின்விளக்கு வசதி, கழிப்பறைகள் வசதிகள் ஆகியவை தற்போது புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல ஆத்தூர் அடுத்த வடசென்னிமலை தொகுதியிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது சேலம் மாவட்டத்தில் புதியதாக சுற்றுலா தலங்கள் ஏற்படுத்த கள ஆய்வு துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி படகுத் துறையை மேம்படுத்த சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. படகுத்துறையில் சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் நிழற்குடைகள், கான்கிரீட் தளங்கள், வாகன நிறுத்துமிடம்ம் உணவு விடுதிகள் ஆகியவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,”சுமாராக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் வழியாக தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக விரைவில் அந்த கருத்துரு ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு கிடைக்கும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், விரைந்து பூலாம்பட்டி படகுத்துறை மேம்பாட்டு பணிகள் நடைபெறும்” என்றார்.
சுற்றுலாத் துறையின் தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கும் அவ்வூர்வாசிகள், தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறவுள்ளது குறித்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். பூலாம்பட்டி படகுத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளைப் போல சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும், புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி