சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறகு இருப்பாளிக்கு வந்தார். வரும் வழியில் நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம், சவுரியூரில் பரப்புரை வேனில் ஏறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார். பிறகு இருப்பாளியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இங்கு ரூபாய் 10 கோடியே 69 லட்சம் மதிப்பில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மக்கள் தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, 2 கோடியே 6 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500, அரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு கரும்பு ஜனவரி நான்காம் தேதி முதல் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்து தற்போது திறக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அற்புதமான திட்டம் ஆகும். ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இந்த ஜெயலலிதா அரசு நிறைவேற்றிவருகிறது.
பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டீர்கள். வழங்கினோம். இதுபோல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும் என கேட்டீர்கள். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது இதுபோன்ற பொதுமக்கள் வைத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றிவருகிறோம்.
மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 100 ஏரிகளில் நிரப்ப திட்டம் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவடைய இருக்கிறது. இந்தத் திட்டம் ரூபாய்
565 கோடி திட்டமாகும். அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டில் 313 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 11 அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது . இதன் மூலம் 130 இடங்கள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 430 இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது”என்றார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ராமன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், மேட்டூர் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன்,மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன்,மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை மற்றும் பலர் பங்கேற்றனர்.