சேலம்: அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டால், அவற்றை நடத்துவோர் மீதும், சாயப்பட்டறை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சாயப்பட்டறை இயங்கும் கட்டடம் சீல் வைக்கப்படும் என்றும், மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகரம் எருமாபாளையம் பகுதியில், இயங்கி வரும் ஏ.எல்.சி. நூற்பாலை மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனம் , சாயக்கழிவை வெளியேற்றி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருவதாக புகார் கூறி, எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பகுதி மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, மாவட்டத்தில் இயங்கி வரும் அனுமதி இல்லா சாயப் பட்டறைகள் மற்றும் சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவு அப்படியே வெளியேற்றும் ஆலைகளின் நிலை குறித்தும், கோபால கிருஷ்ணனிடம் நேரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தும் பேசினார்.
அப்போது கோபால கிருஷ்ணன் கூறியதாவது:
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக, அவ்வப்பொழுது எங்களுக்கு தகவல்கள் கிடைக்கும்.
அதனை அடுத்து அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளை நடத்துவோருக்கு அபராதம் விதித்து பட்டறைகள் சீல் வைக்கப்படும். ஆனாலும் இதுபோன்ற அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் இனி இயங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை கொண்டு வர முடிவு செய்து இருக்கிறோம். இனிமேல் மாவட்டத்தில் சாயப்பட்டறைகள் அனுமதி இல்லாமல் இயங்கினால் அந்த பட்டறை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதித்து கட்டடத்தை தொடர்ந்து பயன்படுத்தாதவண்ணம் சீல் வைக்கப்படும்.
அதேபோல எருமாபாளையம் பகுதியில் இயங்கிவரும் சர்ச்சைக்குரிய ஏ.எல்.சி. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக நிலத்திற்குள் விடப்படுகிறது என்று புகார் வந்துள்ளது.
எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை ஐஐடி பேராசிரியர் குழு சேலம் விரைவில் வர உள்ளது. அவர்கள் ஏ.எல்.சி ஆலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அந்த ஆலை மீது உரிய நடவடிக்கையை கட்டாயம் எடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.