சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவலர் சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப் படையில் பணியாற்றிவந்தார்.
மேச்சேரி உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில், காவலர் பாலாஜி கடந்தாண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைப்போல அஸ்தம்பட்டி பகுதியில் காவலர் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கியதில் மீண்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாலாஜிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது.
பாலாஜி அறையின் கதவு மூடிய நிலையில் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அவரது மனைவி நந்தினி அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது, பாலாஜி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மதுப்பழக்கம், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் பாலாஜி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.