சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரின் மன அழுத்தத்தை குறைக்க, நூலகம் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாநகரம் , கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில், புகார் தர வரும் பொது மக்கள் நீண்ட நேர காத்திருக்கும் போது மன அழுத்தம் உண்டாவதை தடுக்க, புத்தகம் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கிச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் கூறுகையில்," காவல் நிலையம் வரும் பொதுமக்கள் புகார் தர காத்திருக்கும் சூழல் உள்ளது. இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல், இங்கு உள்ள நூலகத்தில் வைக்கப்படும் புத்தகங்களை படிக்கும் சூழலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளோம்.
இதில், பொதுஅறிவு புத்தகங்கள், நீதி போதனை புத்தகங்கள், செய்தித்தாள்கள் என அனைத்தும் பொது மக்கள் படிப்பதற்காக வைக்கப்படும். புத்தகங்கள் படிக்கும் போது அவர்களது மனஇறுக்கம் தவிர்க்கப்படும். இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை அமர்ந்து படிக்கலாம். தற்போது நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காவல் நிலையம் முன்புறம் உள்ள சுவற்றில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உருவப் படம் தீட்டப்பட்டுள்ளது. வண்ணமயமான இயற்கை காட்சிகள், மலர்கள் மற்றும் உருவங்கள் கண்களைக் கவரும் வகையில் சுவர்களில் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.