சேலம்: டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரினா பேகம். இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் ஜுவல்லரியில் தங்க நகையை வாங்கியிருந்தார். இந்த தங்க நகையில் சில பகுதிகள் பழுதாகி இருந்தது. இதனால், தனது நகையை பழுது பார்த்துத் தர, கடந்த வாரம் ஜெரினா பேகம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் ஜுவல்லரிக்கு வந்து பழுதுபார்த்துத் தரும்படி கூறினார்.
பின்னர் ஜெரினா பேகம் அந்நகை கடை ஊழியர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(39) என்பவரிடம் தனது 185.640 கிராம் எடை கொண்ட ரூபாய் 9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புடைய நகையைக் கொடுத்து பழுதுபார்த்துத் தர கூறியுள்ளார்.
இதன் பிறகு அக்கடைக்கு சென்ற ஜெரினா பேகம், தனது நகையை கேட்டதற்கு, நீங்கள் எந்த நகையும் கொடுத்ததாக புத்தகத்தில் பதிவு இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் நகைக்கடை உதவி மேலாளர் சந்திரசேகரனிடம் சென்று தனது நகையை தருமாறு கேட்டார். அப்போது நகைக்கடை உதவி மேலாளர் சந்திரசேகர், கடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்தார்.
அப்போது சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் கடைக்கு இரண்டு மூன்று நாட்களாக வராதது தெரியவந்தது. ஜெரினா பேகத்திடமிருந்து கார்த்திக் தான் தங்க நகையை வாங்கி இருப்பதும், பின்னர் அவர் தங்க நகையை வரவு வைக்காமல் திருடி சென்றதும் தெரியவந்தது. இதன் பிறகு, கார்த்திக் வீட்டுக்கு தேடிச்சென்ற கடை ஊழியர்கள் அவர் அங்கு இல்லாததால் அவரை போனில் தொடர்புகொள்ள முயன்றபோது, போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
பின்னர் இது குறித்து மலபார் கோல்டு நகைக்கடை உதவி மேலாளர் சந்திரசேகர், நகையை திருடிச் சென்ற கார்த்திக் குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் இன்று (அக்.20) புகார் செய்தார். இதன் பேரில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "தலையை அறுத்து காலி செய்துவிடுவோம்" - நெல்லையில் பெண் தாசில்தாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த வீடியோ!