சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகேவுள்ள கடத்தூர் பகுதியில் இன்று (நவ.10) காலை குறி சொல்வதன் மூலம் தோஷம் கழிப்பதாக கூறி ஐந்து இளைஞர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விளம்பரம் செய்துள்ளனர்.
அப்போது, கடத்தூர் பகுதி தறி தொழிலாளி பூவராகவன் (47) என்பவரது வீட்டிற்குச் சென்ற ஐந்து இளைஞர்கள், அவரது மனைவி அம்மாசி (43) என்பரிடம், “உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தோஷம் உள்ளது.
அதை கழிக்க வேண்டுமென்றால், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகளை தர வேண்டும். அதை தோஷம் கழிக்க பயன்படுத்தியப் பிறகு திருப்பி கொடுத்து விடுவோம்” எனக் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அப்பெண் கழுத்திலிருந்த தங்க நகைகள், காதிலிருந்த காதணிகள் என மூன்று சவரன் நகைகளை கழட்டிக் கொடுத்துள்ளார். இதனை வாங்கிய இளைஞர்கள் அப்பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர், வீடு திரும்பிய அவர்கள் நகைகளை அப்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
அதனை வாங்கிக்கொண்ட அப்பெண் நகைகள் அனைத்தும் போலியானது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அந்த இளைஞர்களிடம் கேட்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆட்டையம்பட்டி காவல் துறையினரிடம் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடையில் 5 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை!