சேலம் குரங்குச்சாவடிப் பகுதியில் இயங்கிவருகிறது பிரபல நகைக்கடையான ஏ.என்.எஸ். ஜுவல்லரி. கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் வீடு நகைக் கடையின் அருகிலேயே அமைந்துள்ளது.
நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டினுள்ளே லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரைக் கிலோ தங்க, வைர நகைகள், ஆறு லட்ச ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திருட்டில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க காவல் துறை மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில் அளித்த பேட்டியில், "நள்ளிரவில் வீடு புகுந்த மங்கி குல்லாய் அணிந்த நபர்கள் தங்க, வைர நகைகள், ரொக்கப்பணத்தை திருடிவிட்டு வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவர் வழியாகச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்த அங்கிருந்த காவலாளி ஒருவர் அவர்களைச் சத்தமிட்டு பிடிக்க முயன்றபோது அவரை தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவருகிறோம். மேலும் குற்றவாளிகளின் தடயங்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படியுங்க: நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை!