சேலம்: கருமந்துறை மலைப்பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கள்ளச் சாராயம் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம், கருமந்துறை அடுத்த ராக்கோடு பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருமந்துறை ராக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், அவரது விவசாய தோட்டத்தில் கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து 150 லிட்டர் கொண்ட 300 பாக்கெட் சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து சாராயம் விற்பனை செய்து வந்த செல்வத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் கருமந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் சாராயம் விற்கப்படுவது குறித்து தகவல் தெரிவித்தால் தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.