சேலம்: சேலத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் அடுத்த தலைமுறையை பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தால் அடுத்த தலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டும்.
ஒருபக்கம் மதுப்பழக்கம், மற்றொரு பக்கம் போதைப்பொருட்கள், ஆன்லைன் சூதாட்டம் என மூன்றும் அடுத்த தலைமுறை இளைஞர்களை சீரழித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் தற்கொலை சம்பவம் நடைபெறுவதாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன். இது தொடர்பான விவரங்களை ஆளுநர் கேட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தனி சட்டம் வேண்டும்" என்று பேசினார்.
தலைசிறந்த தலைவர் கருணாநிதி: தொடர்ந்து பேசிய அவர்," கலைஞர் கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதன் மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர். ராமதாஸ் மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர் கருணாநிதி. அவரை நாம் போற்றுவோம்" என்றார்.
"தகுதியற்ற மருத்துவர்கள் உருவாகுவதை தடுக்கத்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வு முழுவதும் வணிகமாகிவிட்டது. இதனால் தகுதியற்ற மாணவர்கள் வசதி படைத்தவர்கள் எனில் அவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். தகுதியுள்ள மாணவர்கள் ஏழை என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதேபோன்று நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது. கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழகத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையான எதிர்க்கட்சி பாமக: இதன் காரணமாகத்தான் நீட்தேர்வால் அதிக உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று அவகாசம் கேட்கிறோம். எந்த மாநிலமாக இருந்தாலும் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே சுமூகமான உறவு இருக்க வேண்டும். இருவரும் அரசியல் செய்யக்கூடாது. இதனால் பாதிக்கப்படுவது மாநில மக்கள் தான். தமிழ் மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு அதற்கான தீர்வு கொண்டு வரவேண்டும். இருவருக்குமிடையே கருத்து மோதல் இருக்கக் கூடாது.
பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. தமிழகத்தை பொருத்தவரை சிறிய கட்சி தான். தமிழகத்தில் கன்னியாகுமரி உள்பட ஒரு சில இடங்களில் மட்டுமே வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக முழுமையாக வரவில்லை. வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜக உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி பாமக தான். உண்மையான எதிர்க்கட்சியாக பாமக தான் செயல்படுகிறது.
அண்ணாமலைக்கு கேள்வி: மேகதாது பிரச்சினை குறித்து பேசி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று போராடுவாரா? நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பழைய ஓய்வூதியத் திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் திமுகவிற்கு வாக்கு அளித்தனர்.
ஆனால் நிதித்துறை அமைச்சரின் அறிவிப்பு வாக்களித்த அனைவரையும் ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. இது திமுக அரசின் தவறான போக்கு. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஜாதி ரீதியாக பார்க்க கூடாது. அது வளர்ச்சிக்கானவை ஆகும். தமிழக முதல்வர் வன்னியருக்கான இட ஒதுக்கீடு சட்டச்சிக்கல் ஏதும் இல்லாமல் செய்வதாக கூறியுள்ளார். நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று பேசினார்.
இதையும் படிங்க: கொஞ்சம் என்னன்னு பார்த்து விசாரிங்க மோடி ஜி: அண்ணாமலை குறித்து எம்.பி செந்தில்குமார் ட்வீட்