தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 7) முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் முன்பு இன்று காலை முதலே அதிக அளவில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலா தலைமையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சேலம் பள்ளப்பட்டி காவல் துறையினர் 20க்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “இந்த ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளை திறக்காமல் அரசு மதுபான கடைகளைத் திறந்ததன் அவசியம் என்ன? ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சொல்லியபடி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார்கள்.
இதையும் படிங்க: பழைய பொருட்களில் ப்ளூடூத் ஹெட்செட் வடிவமைத்து அசத்திய மாணவன்!