தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில், கட்சி சம்பந்தமான சின்னங்கள், கட்சித் துண்டுகள் அணிந்தபடி வாக்குச்சாவடிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று தேர்தல் விதிமுறை உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ பாப்பம்பாடி என்ற கிராமத்தில் பாமக நிர்வாகி லட்சுமணன் என்பவர் வாக்குச்சாவடி மையத்திற்குள் பாமக துண்டு அணிந்து வந்தார். அதைப் பார்த்த வாக்காளர் ஒருவர், லட்சுமணனிடம் தோளில் அணிந்துள்ள பாமக துண்டை அகற்றுமாறு கூறியுள்ளார்.
அதில், ஆத்திரமடைந்த பாமக நிர்வாகி வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயே கேள்வி கேட்ட வாக்களாரை சராமரியாகத் தாக்கினார். இதைக்கண்ட வாக்குச்சாவடி முகவர்கள், காவலர்கள் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்பாகவே வாக்குப்பதிவு மையத்தில் நடந்த அடிதடி சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ-களின் சொத்து மதிப்பு -ஒரு பார்வை