சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் அழகு நிலையம் நடத்துவதாகக் கூறி அங்கு வரும், பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்த புகாரில் மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு காவலர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று உள்ளதா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து இன்று காலை மீண்டும் காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனாலும் கரோனா அச்சம் காரணமாக காவலர்கள் வெளியிலேயே அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்திய, சேலம் தெற்கு காவல் சரக உதவி ஆணையர் ஈஸ்வரன், டவுன் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள், ஆய்வாளர் குமார், உதவி ஆய்வளர்கள், காவலர்கள் என மொத்தம் 34 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஊர் பகையாக மாறிய இளநீர் திருட்டு' - தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!