சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை செலுத்த இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர்.
கரோனா பாதிப்பால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், சுய உதவி குழுக்கள் மூலம் நிதி நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பிக் கேட்டு அதிகாரிகள், தகாத வார்த்தைகளால் திட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கூறுகையில், "தற்போது பொதுபோக்குவரத்து இல்லாததால் நெசவு தொழில் மேற்கொள்ள முடியாமல் உள்ளோம். ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்தால் கடனை திரும்பச் செலுத்தி விடுவோம்.
ஆனால் நிதி நிறுவனங்கள் கால அவகாசம் கொடுக்காமல், நாள்தோறும் கடனை திரும்ப செலுத்தும்படி பல்வேறு அச்சுறுத்தல்கள் தந்த வண்ணம் உள்ளன. தகாத வார்த்தைகளால் பேசி நிதி நிறுவன ஊழியர்கள் தரும் அச்சுறுத்தல் தாங்காமல் எங்கள் குழுவில் உள்ள ஒரு பெண் விஷமருந்து குடித்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே இதுபோன்ற நிகழ்வை தடுக்கும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாங்கிய கடனை திரும்ப செலுத்த மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர் .