சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கோவிந்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாட்டப்பன் மகளிர் சுய உதவிக் குழுவினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் .
அந்த மனுவில் 'கோவிந்தம் பாளையம் கிராமத்தில் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வரும் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாரியம்மன் கோயில் கட்ட பணிகள் செய்து வருகிறோம்.
எங்களுக்கு இப்போதுதான் வழிபாட்டுக்கு என சொந்தமாக ஒரு கோயில் கட்டி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் ஊர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் அஸ்திவாரத்தின் அருகில் தனது பயன்பாட்டுக்கான கழிவறை கட்டி வருகிறார்.
இது தொடர்பாக அவரிடம்,' கோயில் அருகில் கழிவறை கட்ட வேண்டாம் என்று ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டோம் ஆனால் அவர் எனது விருப்பம் அது அரசாங்க புறம்போக்கு இடம் நான் கட்டுவேன்' என்று அடாவடியாக கூறி கழிவறை கட்டுமான பணியை செய்து வருகிறார்.
எனவே அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரை வேண்டிக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.