சேலம்: சேலத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, லாட்டரி சீட்டு வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், காவல் ஆய்வாளர்கள் செந்தில், தனசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை இரும்பாலை பகுதியைச் சேர்ந்த லாட்டரி சீட்டு வியாபாரி கணேசனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் லாட்டரி சீட்டு வியாபாரி சீனிவாசனை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், சீனிவாசன் நேற்று போலீஸாரிடம் சிக்கினார். அவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.