சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றவேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் கூலித் தொழிலாளர்களை தொகுப்பூதிய தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டியளித்த தொழிற்சங்க நிர்வாகிகள் நான்கு பேர் நேற்று மாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. நிர்வாகத்தின் இந்த முடிவைக் கண்டித்தும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பெரியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளைப் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பல்கலைக்கழக பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, பெரியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்துவருவதாகவும் தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து ஊடகங்கள் முன் பேசியதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணத்தை திரும்பப் பெறும்வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கலைவாணி கூறும்பொழுது, எந்தவிதமான தவறு செய்யாத தன்னை தற்காலிக பணிநீக்கம் செய்ததை திரும்பப் பெறும்வரை பல்கலைக்கழக வளாகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தனக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க:
4ஆவது நாளாக நீடித்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம்! - நோயாளிகள் கடும் பாதிப்பு