சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்துத் தர வலியுறுத்தி அந்த இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போதைய வட்டாட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை ஆய்வு செய்து பிரித்து வழங்குவதாக ஒப்பந்தம் செய்ததுடன், ஆறு மாதங்களில் வழங்குவதாக உறுதியளித்து ஒப்பந்த கடிதம் வழங்கினர்.
ஆனால் ஜந்து ஆண்டுகள் கடந்தும் வீட்டுமனைப்பட்டா வழங்காததால் நேற்று இரவு முதல் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து, பொதுமக்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.