சேலம் மாவட்டம்,தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே அங்குள்ள ஓடை கால்வாயில் ஆலை நிர்வாகம் வெளியேற்றி வருகிறது.
அதே போல் அந்த பகுதியில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்தும் வெளியேற்றப்படுகின்ற கழிவு நீர்,வாய்க்கால்களில் விடப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பாயும் தண்ணீர் நிறம் மாறி நச்சுத்தன்மை ஏறி பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும்,நிலத்தடி நீரில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசுவதால் அந்த தண்ணீரை குடிக்க முடியாதநிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி விவசாயிகள்,தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயம் பார்த்துவருகின்றனர். இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகையிட்ட பொதுமக்களை சமாதனம் செய்து தொழிற்சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் வாய் மொழி உத்தரவாக தற்காலிகமாக ஆலையை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து வாசனை திரவ ஆலை மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.