சேலம்: தாரமங்கலம் அருகில் நான்கு ரோடு அடுத்துள்ள மேட்டுமாரனூரில் இருக்கும் ஒரு மலையின் மீது கரியபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இந்த கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேநேரம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது கரியபெருமாள் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, கோயிலுக்கு சொந்தமான, தானமாக மற்றும் நிவந்தமாக வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கோயிலின் தங்க நகைகள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, தனி நபர்கள் சிலர் அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “கரியபெருமாள் கோயிலுக்கு என்று சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. முன்னோர்கள் வழங்கிய நிலம் அது.
அதில் விளையும் விளைபொருட்களை வைத்தே கோயிலுக்கு கைங்கர்யம் நடத்தப்படும். இந்த நிலையில் கோயில் நிலத்தை, சில தனி நபர்கள் அவர்களுடைய அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இது மட்டுமின்றி கோயிலுக்குச் சொந்தமான 100 சவரன் தங்க நகைகளைக் கைப்பற்றி, அவற்றை தாரமங்கலத்தில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்து விட்டனர்.
பல வருடங்களாக கோயில் நகைகளைப் பற்றி பொதுமக்கள் கேட்டபோது, இதுவரை அந்த நகைகளை அந்த நபர்கள் கண்ணில் காண்பித்ததே இல்லை. மேலும் இந்தக் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்படும் காணிக்கையான பணம், நகைகளையும், அராஜகமாக அவர்களே கைப்பற்றிக் கொள்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் இப்படி பல்வேறு வகையான ஊழல்களும், முறைகேடுகளும் நடந்து வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பி வருகிறோம். இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்களுக்கு மிகுந்த மனவேதனை உள்ளது. கரியபெருமாள் கோயில் அனைத்து தரப்பு சமுதாய மக்களின் வழிபாட்டுத் தலமாக உள்ளது.
இதனை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கரியபெருமாள் கோயில் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவில் நிலங்களை அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி!