சேலம் : மாமாங்கம் பகுதியில் மேக்னசைட் (magnasite) எனப்படும் வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கமும், தொழிற்சாலையும் கடந்த 100 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பர்ன் அண்ட கோ (Burn & co) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை மற்றும் சுரங்கம் அமைந்துள்ள நிலத்தை, கடந்த சில வருடங்களுக்கு முன்பாக, சேலம் உருக்காலை நிர்வாகம் விலை கொடுத்து வாங்கியது.
கடந்த 100 வருடங்களுக்கு முன்பாக சுரங்கம் துவங்கிய நிலையில், வெள்ளை கல் வெட்டி எடுக்க நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகும், இந்திய அரசு, உரிமையாளர்களிடம் போடப்பட்டிருந்த ஒப்பந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தது.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டு காலமாக சுரங்கம் செயல்படாமல் உள்ள காரணத்தினாலும், ஒப்பந்த காலம் நிறைவடைந்து 30 ஆண்டுகள் ஆனதாலும், நிலத்தை தங்களிடமே ஒப்படைக்குமாறு அதன் வாரிசுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த விஜய சாந்தி என்பவரிடம் நிலத்தை மீட்டுத் தருமாறு, வாரிசுதாரர்கள் உரிமையை அளித்துள்ளனர்.
எனவே, பயன்பாடற்று கிடக்கும் நிலத்தை வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்த அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பல நூறு கோடி நிலுவைத் தொகையை வழங்குமாறும், விஜயசாந்தி மத்திய அரசின் நிறுவனமான செயில் நிறுவனத்தை வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால், செயில் ரீபேக்டரி நிறுவனத்திற்கும், நில உரிமை கோரியவர்களுக்கும் இடையே பிரச்சனை தீவிரமடைந்தது. மேலும், சுரங்கம் செயல்படாத காரணத்தினால் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, நில உரிமை கோரும் பிரச்சனையில் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நிறுவனமும், நிலம் கோரும் நபர்களும் செயல்பட்டு, சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
இது தொடர்பாக பாமக தொழிற்சங்க தலைவர் எம்.பி. சதாசிவம் கூறுகையில், "சுரங்கம் செயல்படாத காரணத்தால் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நில உரிமையாளர்களிடம் போடப்பட்டிருந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
எனவே, செயில் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற்று உடனடியாக சுரங்கத்தை திறக்க வேண்டும். மேலும், தொழிலாளர்களின் நலனில் பாதிப்பு ஏற்பட்டால் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் பா.ம.க தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நேரிடும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மயானத்திற்கு பொதுப்பாதை பிரச்சினை.. இறந்தவர் உடல் 3 நாட்கள் வீட்டிலேயே வைக்கப்பட்ட அவலம்.. தருமபுரியில் நடந்தது என்ன?