சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டிய சன்னியாசி குண்டு ஊராட்சிக்குள்பட்ட காட்டுமரக்குட்டை பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 45 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களின் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய இடத்தில் தனிநபர் ஒருவர் வீடு கட்டியுள்ளார்.
இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்திவரும் பாதையை மறித்து சுவர் எழுப்புவதற்கு காட்டுமரக்குட்டை காலனி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் பாதையை மறித்து சுவர் எழுப்பக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் துறையினர் கால அவகாசம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும் நீதிமன்ற உத்தரவை வருவாய்த் துறையினர் செயல்படுத்தாத காரணத்தால் குடியிருப்புவாசிகள், அவர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க :இருசக்கர வாகனங்களைத் திருடிய 2 இளம்பெண்கள் கைது