கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பணியில் தொய்வு இல்லாமல் இரவு பகலாக ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், சேலம் அரிசிபாளையம் பகுதியில் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆன்லைன் மூலம் ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து ஹேமலதா என்பவர் கூறுகையில,"தூய்மைப் பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆன்லைன் ஓவியம் வரையும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சேலம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் அவரவர் வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்து சமர்ப்பித்துள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி இந்த ஓவியங்களை பிரமாண்ட அளவில் ஒருங்கிணைத்து கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக அனுப்பிவைக்கப்படும். இந்த ஓவிய நிகழ்வில் பெறப்பட்ட பதிவு தொகை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்படும். கரோனா நோய்த் தொற்று குறித்து மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இது உலக சாதனை முயற்சி" என்றார்.
இதையும் படிங்க... 10 நிமிடங்களில் 40 கடுமையான ஆசனங்கள் செய்த 12 வயது சிறுவன்!