சேலத்தின் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள பிரபல தனியார் கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். இவருக்கு சேலத்தில் மட்டும் சொந்தமாக மூன்று நகைக்கடைகள் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீனிவாசனின் மூன்றாவது மகனான ஸ்ரீபாஷ்யம் என்பவரின் வீட்டில் நேற்றிரவு பின்புற கதவை உடைத்து தங்க, வைர நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒன்றரை கிலோ தங்கமும் ஆறு லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சில வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்திய சோதனையில், தாங்கள் வந்த வழியை கண்டுபிடிக்காமலிருக்க கொள்ளையர்கள் மிளகாய்ப் பொடியை தூவி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத இருவர், பின்புற தடுப்புச் சுவர் ஏறி வீட்டினுள்ளே குதித்ததைப் பார்த்த நகைக்கடை காவலாளிகள் அவர்களைப் பிடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அதற்குள் அவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், கிலோ கணக்கிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!