சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை பவானூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கோழிப்பண்ணை, நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்திவருகிறார். நேற்று இரவு எட்டு மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கோழிப்பண்ணையில் பற்றிய தீ மளமளவென நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பரவியது.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் ஓமலூர் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மற்றும் ஓமலூரிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
இச்சம்பவம் குறித்து, ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.