கேரள மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
மேலும் பயங்கரவாதிகள் சிலர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிய வந்ததையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்திவருகிறார்கள்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அலி நிவாஸ், அப்துல் சமீம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது, காஜா முகைதீன் ஆகிய நான்கு பேர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்து பின்னர் கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நான்கு பேரும் இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள், ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அனுப்பி கண்காணிக்க அறிவுறுத்தினர்.
இந்த நால்வரும் சேலம் வந்து ரயில்களில் தப்பிச் செல்லலாம், எனவே இவர்களை கைது செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து சேலம் ஜங்சன் ரயில் நிலையம் வழியே செல்லும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர நான்கு பேரின் புகைப்படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பயணிகளுக்கு வழங்கி நான்கு பேர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வனக்காப்பாளரின் இளையராஜா பாடல்