சேலத்தை அடுத்த ஓமலூர் புளியம்பட்டியில் கடந்த மே 19ஆம் தேதி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள், வெடிமருந்து, முகமூடிகள் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், சேலம் கிச்சிபாளையம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் (25) என்பதும், செவ்வாய்பேட்டை மரமண்டி ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பொறியியல் பட்டதாரிகளான இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போன்று புதிய இயக்கத்தைத் தொடங்கி ஆயுதப் போராட்டம் நடத்திட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதற்காக செட்டிசாவடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஏ.கபிலர் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆயுத சட்டம் 1959 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது. சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நவீன் மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும் செட்டிச்சாவடியில் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய வீட்டிலும் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தொடர் விசாரணையில் உலக தமிழ் நீதி மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி குவாரி, டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல் நடத்திட திட்டமிட்டதும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க இருந்ததும் தெரியவந்தது.
மேலும் 2022 மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், விடுதலைப்புலிகள் அமைப்பைப் போன்ற அமைப்பு தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்றுள்ளது என்பதை அரசுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடு ரோட்டில் பாலியல் தொல்லை,கொடூர தாக்குதல்..! சென்னை பேராசிரியர் கைது..