சேலம்: ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கூற இயலாத வார்த்தைகளில் கீழ்நிலை ஊழியர்களை வசைபாடுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்து, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் 15 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (அக்.17) நடைபெற்றது. இதில் சேலம் மண்டல அளவில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகானந்தம் கூறுகையில், “மாநிலம் முழுவதும் துப்புரவு, குடிநீர் வழங்கல், மின் பராமரிப்பு என உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல பிரிவு பணியிடங்கள் அனைத்தும், தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் அவர்கள் தெய்வமாகத் தெரிந்தார்கள். ஆனால் தற்பொழுது அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே உடனடியாக தமிழக அரசு தூய்மை பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்கும், மாலை ஆறு மணிக்கு மேல் நடக்கும் காணொலி காட்சி ஆய்வுக் கூட்டத்தைக் கைவிட வேண்டும். இது போன்ற ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்களைக் கூற முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதனைத் தமிழக அரசு கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வரும் நாட்களில் சென்னையில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி இயக்குநர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். அதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் லியோ படத்தை கொடுக்காதது தான் தொல்லைக்கு காரணம்" - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு