பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக அந்தந்த மாவட்ட வேளாண் துறை மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை இணைத்து மோசடி நடந்திருப்பது குறித்து கடந்த சில மாதங்களாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு, சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலத்தில் இத்திட்டத்தில் 14 ஆயிரம் பேர் முறைகேடாகப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 5,000 பேர் சேலத்தில் பதிவு செய்து முறைகேடாக நிதி பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வேளாண் அலுவலகங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரில் சேலம் மாவட்டம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மை அலுவலக தற்காலிக பணியாளர் ராஜா (30) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 51 பேர் மீது அரசு பணத்தைக் கையாடல் செய்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் தாரமங்கலம் வட்டாரத்தில் தனியார் கணினி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயரை போலி ஆவணத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்ததாக இருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதனிடையே சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், திருச்சி பாசன மேலாண் பயிற்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன் சேலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வேளாண்துறை அலுவலர்கள் கூறுகையில், 'பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடாக விவசாயிகள் பெயரில் வேறொருவர் வங்கிக் கணக்குகளை பதிவேற்றம் செய்து பணம் பெற்று முறைகேடு நடந்துள்ளது. சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. அதில் ஒன்றரை கோடி பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த பெரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடந்துவருகிறது. மோசடியில் ஈடுபட்ட அனைவரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு, அவர்களிடமிருந்து பணம் திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.